கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இதனால் ஏழை மக்கள், வெளிமாநில தொழிலாளர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசு அவர்களுக்கு உதவும் நோக்கில் அனைவரின் வங்கி கணக்குகளிலும் மாதத்திற்கு 7,500 ரூபாய் என அடுத்த ஆறு மாதத்திற்கு வழங்க வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை விடுத்தது.
இதேபோல், வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலத்துக்கு இலவசமாகவும் பாதுகாப்பாகவும் செல்வதை உறுதி செய்ய வேண்டும், மகாத்மா காந்தி ஊரக வளர்ச்சி திட்டத்தின் பணி காலத்தை 200 நாள்களாக உயர்த்த வேண்டும், சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை காங்கிரஸ் முன்வைத்தது. இதனை மக்களிடையே கொண்டு சேர்க்கும் வகையில் சமூக வலைதளங்களில் 'ஸ்பீக் அப் இந்தியா' என்ற பெயரில் பரப்புரை மேற்கொள்ளப்படும் என காங்கிரஸ் அறிவித்தது.
இது 10 கோடி மக்களை சென்றடைந்து உலகளவில் ட்ரெண்டானதாக காங்கிரஸ் தற்போது அறிவித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் அஜய் மக்கான் கூறுகையில், "ஸ்பீக் அப் இந்தியா பரப்புரை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. பலரிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சமூக ஆர்வலர்கள், தலைவர்கள், ஊழியர்கள் என 57.3 லட்சம் பேர் பரப்புரையை பகிர்ந்திருப்பதன் விவரங்கள் எங்கள் சமூக வலைதள அணிக்கு கிடைத்துள்ளது. இந்த பரப்புரை 10 கோடி மக்களை சென்றடைந்திருக்கிறது.
உலகளவில் ட்விட்டரில் ட்ரெண்டாகி உள்ளது. இந்தியா இன்று உரக்கப் பேசியுள்ளது. இது எங்களின் தொடக்கம்தான். மக்களின் பிரச்னைகளுக்கு மத்திய அரசு இப்போதாவது செவி சாய்க்கும் என நம்புகிறேன்" என்றார்.
இதையும் படிங்க: ஜேஎம்பி பயங்கரவாதி அப்துல் கரீம் கைது!