'பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்' என்ற பழைய திரைப்பாடல் ஒன்று உள்ளது. அதுபோலவே பறவைகளில் சிட்டுக்குருவிகள் எப்போதும் வீடுகளுடனும், அதிலுள்ள மனிதர்களுடனும் ஒருவித நெருங்கியத் தொடர்புகொண்டது. பெரும்பாலும் வீட்டு முற்றங்களில், மரங்களில் கூடுகட்டி வாழ்ந்துவந்த சிட்டுக்குருவிகள், மாறிவரும் சூழலால் அழிவை நோக்கித் தள்ளப்பட்டுள்ளது.
பல்லுயிர் பாதுகாப்பு பயிற்றுவிப்பு
அலைபேசி கோபுர கதிர்வீச்சுகள் இதற்குக் காரணமென்றாலும், மனிதர்களுடனான தொடர்பற்ற நிலைதான் இதற்கு முக்கியக் காரணம் என்கின்றனர் சூழலியலாளர்கள். அந்தத் தொடர்பை மீண்டும் புதுப்பிக்கவே புதுச்சேரி முத்தியால் பேட்டையில் ஒரு வீடு, சிட்டுக்குருவிகளின் சரணாலயமாக உருவெடுத்திருக்கிறது. கீதா-சந்திரசேகரன் இணையர்தான் இச்சரணாலயத்தின் பாதுகாவலர்கள்.
இவர்கள் வெளியூர் சென்றுவிட்டால்கூட அருகில் வசிப்பவர்கள் வந்து குருவிகளுக்கு உணவளிக்கின்றனர். மேலும், குருவிகளின் நலன்கருதி தீபாவளியின்போது பட்டாசுகூட அப்பகுதி சிறுவர்கள் வெடிப்பதில்லை. கீதா-சந்திரசேகரன் இணை, தான் மட்டுமல்லாது அப்பகுதியினரையும் பல்லுயிர் பாதுகாப்பிற்கு பயிற்றுவித்துள்ளனர்.
அணில்-குருவி குறும்புச் சண்டை
குருவிகள் முட்டையிட்டுக் குஞ்சுப் பொரித்த கூட்டைச் சுத்தம்செய்யாமல் இருந்தால், இன்னொரு குருவி அதில் முட்டை இடாது. அதனால் குருவி வெளியே போனவுடன் அக்கூட்டைச் சுத்தம் செய்துவிடுவதாகக் கூறும் இவர்கள், குருவிகள் கூடுகட்டக் கொண்டுவரும் தேங்காய் நார், பஞ்சு, குச்சிகளை சில நேரங்களில் அணில்கள் வந்து ஆக்கிரமிக்க, அப்போது குருவிக்கும் அணிலுக்கும் நடக்கும் குறும்புச் சண்டை, தொட்டிகளில் அவை போட்டிப்போட்டு குளிப்பது போன்றவை பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சியாக இருக்கும் என்றும் சிலாகிக்கின்றனர்.
'எப்போது நீங்கள்?'
எப்படிக் காடுகள், விலங்குகள் அழிந்தால் மனிதனால் வாழ இயலாதோ, அதுபோலவே சிட்டுக்குருவி போன்ற பறவையினங்களின் அழிவு அதற்கானது மட்டுமல்ல; அது மனித இனத்திற்குமானது என்பதை உணர்ந்தவர்களாக கீதாவும் சந்திரசேகரனும் மாறிவிட்டனர். 'எப்போது நீங்கள்?' என்பதே உலகச் சிட்டுக்குருவிகள் நாளான இன்று அவை நம்மைப் பார்த்து கேட்கும் கேள்வி.
இதையும் படிங்க: முத்தையாபுரம் மாட்டு வண்டி பந்தயத்தில் சீறிப் பாய்ந்த காளைகள்!