2019ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி அசாம் மாநிலத்தில் 21 லட்சம் பன்றிகள் இருந்தன. தற்போது இதன் எண்ணிக்கை 30 லட்சத்தைக் கடந்துள்ளது. அசாம் மாநிலத்தின் முக்கிய கால் நடை வளர்ப்பாக பன்றிகள் உள்ளன. இதன் மூலம் விவசாயிகளும் பயனடைந்து வருகின்றனர்.
இந்நிலையில் ஆப்பிரிக்க காய்ச்சலால் 2,500 பன்றிகள் அசாமில் உயிரிழந்துள்ளன. இதுகுறித்து அம்மாநில முதலமைச்சர் சர்பனந்த சோனோவால் பேசுகையில், '' பன்றிகள் உயிரிழப்பதைத் தடுக்க கால்நடைத் துறையினரும், வனத்துறையினரும் இணைந்து தீர்க்கமான திட்டத்தை உருவாக்க வேண்டும்.
பன்றிகள் வளர்ப்பில் ஏற்பட்டுள்ள நெருக்கடியைக் கட்டுப்படுத்த தேசிய பன்றிகள் ஆராய்ச்சி மையத்துடன் இணைந்து கால்நடை துறையினர் செயல்பட வேண்டும். நெருக்கடியான நேரமாக உணர்ந்து வேகமாக இதனைக் கட்டுப்படுத்த வேண்டும். பன்றிகள் உயிரிழந்ததால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும்'' என்றார்.
தொடர்ந்து கால்நடைத் துறை அமைச்சர் அதுல் போரா பேசுகையில், '' பிப்ரவரி மாதம் இறுதியிலேயே இந்த நோய் பற்றி தெரியவந்தது. ஆனால் சீனாவின் சியாங் கிராமத்தில் இருந்து அருணாச்சல பிரதேசம் வழியாக பன்றிகளைத் தாக்கும் இந்த நோய் பரவியுள்ளது.
அசாம் மாநிலத்தில் பாதிக்கப்பட்டுள்ள பன்றிகளை பலியிடுவதற்கு பதிலாக மாற்று முறை கண்டுபிடிக்கப்படும்'' என்றார். ஏற்கனவே இந்தியாவில் கரோனா வைரஸால் பொதுமக்கள் அவதியடைந்து வரும் நிலையில், புதிதாக பன்றிகளைத் தாக்கி வரும் ஆப்பிரிக்க காய்ச்சலால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: கர்நாடகாவில் ஒரே நாளில் ரூ.45 கோடிக்கு மது விற்பனை...!