கரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக நாடு முழுவதும் கடந்த மாதம் 24ஆம் தேதி நள்ளிரவு முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் செயல்பட முடியாமல் பெரும் நிதி நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில், இந்நிறுவனங்களை நிதி நெருக்கடியில் இருந்து மீட்குமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், "நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்றில் ஒரு பகுதியை சிறு, குறு, மற்றும் நடுத்தர நிறுவனங்களே பங்காற்றுகின்றன. மேலும், 60 சதவீத ஏற்றுமதியை இந்நிறுவனங்கள் தான் மேற்கொள்கின்றன.
இந்தச் சூழலில், 6.3 கோடி சிறு, குறு, மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அழிவின் விளிப்பில் உள்ளன. ஊரடங்கு காரணமாக ஒருநாளைக்கு இத்துறையை சேர்ந்த நிறுவனங்கள் சுமார் ரூ. 30 ஆயிரம் கோடியை இழக்க நேரிடுகிறது.
இந்நிறுவனங்களில் பணிபுரியும் 11 கோடி ஊழியர்கள் தங்களது வேலையை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள வங்கி கடன் சலுகைகள் இந்நிறுவனங்களைச் சென்றடைய உரிய நடவடிக்கைளை மேற்கொள்ள வேண்டும்
ஆகையால் இந்நிறுவனங்களில் பணிபரியும் ஊழியர்களின் ஊதியத்தை பாதுகாக்க நிவாரண நிதி அளிக்க வேண்டும்" எனக் கோரியுள்ளார்.
இதையும் படிங்க : ஈடிவி பாரத் செய்தி எதிரொலி: வெளிநாட்டில் உயிரிழந்தவரின் உடல் இந்தியா வர அனுமதி