ஐநாவுக்கு பிறகு மிகப்பெரிய சர்வதேச அமைப்பாக அணி சேரா இயக்கம் விளங்குகிறது. 120 உறுப்பு நாடுகளை கொண்ட அணி சேரா இயக்கத்தின் மாநாடு காணொலி மூலம் நடைபெற்றது. அசர்பைஜான் நாட்டின் அதிபரும் அணி சேரா இயக்கத்தின் தலைவருமான இலாம் அலியேவ் முன்னெடுப்பில் நடைபெற்ற இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பாகிஸ்தானை கடுமையாக விமர்சித்து பேசினார்.
தீவிரவாதம், போலி செய்தி, திரிக்கப்பட்ட வீடியோக்கள் போன்ற அபாயகரமான வைரஸ்களை பரப்பி சிலர் நாடுகளுக்கிடையே பகைமையை உருவாக்கிவருகின்றனர் என அவர் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், "கரோனாவுக்கு பிறகான உலகத்தில், சமத்துவம், மனிதாபிமானம், நேர்மை ஆகியவற்றின் அடிப்படையில் உலகமயமாக்கல் அமைய வேண்டும். இன்றைய உலகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சர்வதேச அமைப்புகள் தேவை.
மனித இனம் சந்தித்திராத தீவிரமான பேரிடரை தற்போது எதிர்கொண்டுள்ளோம். உலகளாவிய ஒற்றுமையை வளர்க்க அணி சேரா இயக்கம் உதவும். எங்களுக்கு தேவை இருந்தபோதிலும், அணி சேரா இயக்கத்தின் 59 உறுப்பு நாடுகள் உள்பட 123 நட்பு நாடுகளுக்கு மருத்துவ உதவி செய்துள்ளோம். நோய்க்கான மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். ஜனநாயகம், ஒழுக்கம், தீர்க்கமான முடிவு மட்டுமே உண்மையான மக்கள் இயக்கத்தை உருவாக்கும்" என்றார்.
2016ஆம் ஆண்டு, அணி சேரா இயக்கத்தின் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொள்ளவில்லை. இந்திய பிரதமர் ஒருவர் அணி சேரா இயக்கத்தின் மாநாட்டில் கலந்துகொள்ளாமல் இருந்தது அதுவே முதல்முறையாகும்.
இதையும் படிங்க: ரகுராம் ராஜனை தொடர்ந்து அபிஜித் பானர்ஜி... பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் ராகுலின் திட்டம்