புதுச்சேரி தேங்காய்த்திட்டு பகுதியில் வசித்துவருபவர் ஏழுமலை. இவர் சமூக நலத் துறையில் வேலைபார்த்துவருகிறார். நேற்று முன்தினம் இரவு இவர் வீட்டில் தூங்குவதற்காக ஏசியை இயக்கியபோது அதிலிருந்து விநோதமான சத்தம் வரவே ஏசி பழுதாகிவிட்டது என நினைத்து ஏசியை நிறுத்தியுள்ளார்.
பாம்பை பிடிக்க நீண்ட போராட்டம்
பின்னர் ஏசி மெக்கானிக்கை வரவழைத்து பரிசோதித்தார், அப்போது பாம்பின் மூன்று தோல்கள் இருந்தை கண்ட ஏசி மெக்கானிக் அதிர்ச்சியடைந்தார். எப்படி ஏசி உள்ளே வந்திருக்க முடியும் என்று குழம்பியவாறே அந்த பாம்பின் தோலை அகற்றி கொண்டிருந்தபோதே, ஏசியின் பின்னால் மறைந்திருந்த இரண்டடி நீளம் கொண்ட சாரைப் பாம்பு ஒன்று தென்பட்டது. பின் எவ்வளவோ முயற்சித்தும் அவர்களால் பாம்பைப் பிடிக்க முடியவில்லை.
இதையடுத்து, வனத் துறைக்கு தகவல் தெரிவித்தவுடன், அங்கு விரைந்துவந்த அவர்கள் ஒரு மணி நேரம் நீண்ட முயற்சிக்கு பிறகு பாம்பை பிடித்து காட்டில் கொண்டு போய்விட்டுள்ளனர்.
பாம்பு எப்படி வந்தது... எப்போது வந்தது?
ஏசிக்கு வெளியே இருக்கும் அவுட்டோர் யூனிட்டிலிருந்து பைப்லைன் அமைக்க ஒரு ஓட்டை போடுவது வழக்கம். அந்த ஓட்டை அடைக்காமல் அப்படியே இருந்ததால், அதன் அருகிலிருந்த மரத்தில் இருந்து வந்திருக்கலாம். பாம்பின் தோலை வைத்து, அது ஏசிக்குள் வந்து மூன்று மாதமாக தங்கிருக்கக்கூடும் என்று தெரிவித்தனர்.