புதுச்சேரி வீமன் நகர் மாந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (29). இவர் மேடை அலங்கரிப்பு, பெயின்ட் அடிப்பது உள்ளிட்ட வேலைகளைச் செய்து வருகிறார். இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் 8ஆம் தேதி இரவு 8 மணியளவில் ஆறுமுகம் திண்டிவனம் செல்லும் சாலையில் கோரிமேடு பகுதியில் நின்றுகொண்டிருந்தார். அப்போது 2 இருசக்கர வாகனங்களில் வந்த 6 பேரில் நால்வர் மட்டும் இறங்கி ஆறுமுகத்தை சராமாரியாக முகத்தில் வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டனர். இதில் படுகாயமடைந்த ஆறுமுகம் கீழே விழுந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்தவர்கள் ஆறுமுகத்தை அருகில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்த புகாரின் அடிப்படையில் தன்வந்தரி நகர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் அதே பகுதியைச் சேர்ந்த மணிரத்தினம், பிரேம் (எ) பிரபாகரன், வெற்றி (எ) வெற்றிச்செல்வம், சாலமோன், மணி, வெற்றி ஆகியோர்தான் கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனையடுத்து காவல் துறையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 6 பேரையும் கைது செய்தனர். காவல் துறையினர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் கடந்த 2016இல் நடைபெற்ற ஒரு தகராறில் ஆறுமுகம் மணிரத்தினத்தை கத்தியால் குத்திவிட்டதாகவும், இந்த வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது ஆறுமுகம் வழக்கை வாபஸ் வாங்காவிட்டால் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளனர். இதனால் முந்திக்கொண்டு ஆறுமுகத்தை வெட்டிக் கொலை செய்ய முயற்சித்ததாகவும் கூறினர். இதனையடுத்து சாலமன், வெற்றிச்செல்வம் உள்ளிட்ட 6 பேரை கோரிமேடு காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: 'தமிழ்நாடு நம்பர் ஒன் மாநிலமாக வரவேண்டும்' - ஆளுநர்