இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு தடுப்பு நடவடிக்கைகள் அதிகரித்துவருகின்றன. நாளுக்கு நாள் எண்ணிக்கை அதிகரித்துவருவதால் வைரஸ் பாதிப்புக்கு ஏற்றவாறு அனைத்து பகுதிகளும் பிரிக்கப்பட்டு நிலைமை தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கரோனா பாதிப்பின் தீவிரத்தன்மைக்கு ஏற்றவாறு மாவட்டங்கள் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என பிரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சிவப்பு பகுதிகளில் உள்ள ஹாட் ஸ்பாட்கள் எனப்படும் அதிதீவிர நோய்த் தொற்று உள்ள பகுதிகளில் முழுமையான ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கரோனா பாதிப்பு குறித்து நேற்று மத்திய உள்துறை அமைச்சகம், ”குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத், சூரத் ஆகிய பகுதிகள், மகாராஷ்டிராவில் உள்ள தானே, தெலங்கானாவில் உள்ள ஹைதராபாத், தமிழ்நாட்டில் உள்ள சென்னை ஆகிய நகரங்களில் வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து மோசமடைந்துவருகிறது. மேற்கண்ட பகுதிகளில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து தீவிரக் களப்பணிகளை மேற்கொள்ள உள்ளது” என தெரிவித்துள்ளது.
சென்னையில் கரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 452ஆக உள்ள நிலையில், ராயபுரம் பகுதிதான் வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது. இதையடுத்து தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திருப்பூர், சேலம் ஆகிய பகுதிகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இழப்பைச் சந்தித்துள்ள இந்திய விமான சேவை நிறுவனங்கள்