சரக்கு-சேவை வரி கலந்தாய்வு (ஜிஎஸ்டி கவுன்சில்) 35ஆவது கூட்டம் இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெறவுள்ளது. இன்று பிற்பகல் 2 மணிக்கு இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதைத் தொடர்ந்து தாக்கல் செய்யப்படவுள்ள நிதிநிலை அறிக்கை குறித்த சிறப்பு ஆலோசனைக் கூட்டமும் நடைபெறவுள்ளது.
தற்போது மின்னணு வாகனங்களுக்கு 12 விழுக்காட்டி சரக்கு-சேவை வரி வசூலிக்கப்படுகிறது. பெட்ரோல் பயன்பாடுகளை குறைப்பதை ஊக்குவிக்கும் வகையில் அதற்கான சரக்கு-சேவை வரி 12 விழுக்காட்டிலிருந்து ஐந்து விழுக்காடாக குறைப்பது தொடர்பாக இந்த சரக்கு-சேவை வரி கலந்தாய்வு ஆலோசனை செய்யப்படவுள்ளது.
மேலும் தற்போது 50 ஆயிரத்துக்கு மேல் வண்டிகளில் எடுத்துச் செல்லப்படும் பொருட்களுக்கு இணையவழி கட்டணம் (இ வே பில்) கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் பல்வேறு முறைகேடுகள் தொடர்ந்து நடைபெறுகிறது.
இதைத் தடுக்க இணையவழிக் கட்டண முறையையும் உடனடி பணம் கட்டுதல் (ஃபாஸ்ட் டேக்) முறையையும் இணைப்பது தொடர்பாக இன்று ஆலோசனை செய்யப்படவுள்ளது.
மேலும் சரக்கு-சேவை வரி தாக்கல் செய்வதை எளிமையாக்குவது, லாட்டரி சீட்டுகளுக்கான சரக்கு-சேவை வரி, பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கான சரக்கு-சேவை வரி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.