பாஜக மூத்தத் தலைவர்களில் ஒருவரான சின்மயானந்தா உத்தரப் பிரதேசத்தில் பல கல்லூரிகளை நடத்திவருகிறார். அதில் படிக்கும் மாணவிகளின் வாழ்க்கையை அவர் சீரழித்துள்ளதாகவும் தன்னை கொலை செய்ய அவர் முயற்சித்து வருவதாகவும், 23 வயதுடைய சட்டக் கல்லூரி மாணவி சமூக வலைதளங்களில் பதிவு செய்தார். இதனைத் தொடர்ந்து, அந்த மாணவி மாயமானார்.
இதையடுத்து, மாணவியின் தந்தை காவல் நிலையத்தில் சின்மயானந்தா, தன் மகளை கடத்தியாகப் புகாரளித்தார். இது தொடர்பாக, வழக்கறிஞர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, இதனை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இதற்கிடையே, காணாமல்போன சட்டக் கல்லூரி மாணவியை ராஜஸ்தானிலிருந்து மீட்டு கொண்டுவந்த உத்தரப் பிரதேச காவல் துறையினர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
பின்னர், வழக்கை அலகாபாத் நீதிமன்றம் விசாரிக்கவும், மாணவிக்கும், மாணவியின் குடும்பத்தாருக்கும் பாதுகாப்பு வழங்கவும், மாணவியை வேறு கல்லூரிக்கு மாற்றவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைக்க உத்தரப் பிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக சின்மயானந்தாவை, சிறப்புப் புலனாய்வுக் குழு தொடர்ந்து ஏழு மணி நேரம் விசாரித்துள்ளது. மேலும் அவரின் அறையை ஆய்வு செய்து பின் அதற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. ஷாஜகான்பூரை விட்டு வெளியே செல்லக் கூடாது எனவும் அவருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.