உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் பட்டியலினப் பெண் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அவர், பலத்த காயங்களுடன் டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த செப்.29ஆம் தேதி உயிரிழந்தார்.
அவரது உடலை வீட்டினருக்கு தராமல் காவல் துறை, மாவட்ட நிர்வாகம் எரித்த சம்பவம் அங்கு போராட்டத்தை கிளப்பியுள்ளது. இதையடுத்து, இந்த சம்பவத்தில் குற்றவாளிகளை விரைந்து பிடிக்க பிரதமர் நரேந்திர மோடி அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திடம் வலியுறுத்தினார். இதையடுத்து வழக்கை விரைந்து நடத்த சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை அம்மாநில உள்துறை செயலர் பக்வான் ஸ்வரூப் தலைமையில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அமைத்துள்ளார்.
இந்த சிறப்பு புலனாய்வு குழு தனது முதல்கட்ட விசாரணையை மேற்கொள்ள சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளது. ஒட்டுமொத்த விசாரணையை ஏழு நாள்களில் மேற்கொண்டு அதன் அறிக்கையை மாநில நிர்வாகத்திடம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கோவிட் - 19: இந்தியாவில் ஒரு லட்சத்தை நெருங்கும் உயிரிழப்பு