குடியுரிமை திருத்தச் சட்டம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அப்போது முதல் நாடு முழுவதும் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் தொடர் போராட்டம் நடத்திவருகின்றனர். குறிப்பாக, டெல்லி ஷாகீன் பாக்கில் மாதக்கணக்கில் அமைதியான முறையில் சிஏஏவுக்கு எதிராக போராட்டம் நடைபெற்றுவந்தது.
இந்நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் டெல்லி போராட்டத்தில் கடந்த வாரம் வன்முறை வெடித்தது. இதில் 42 பேர் உயிரிழந்தனர், மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்தப் போராட்டத்தின்போது, 70 இஸ்லாமியர்களை கலவரம் ஏற்பட்ட கோகுல்பூரி சந்தை பகுதியிலிருந்து கர்தாம்புரி பகுதிக்கு தங்கள் இரு சக்கர வாகனம் மூலம் சீக்கிய தந்தையும் - மகனும் பத்திரமாக அழைத்துச் சென்றுள்ளனர்.
70 இஸ்லாமியர்களை பத்திரமாக அழைத்துச் சென்ற மோஹிந்தர் சிங் இது குறித்துக் கூறுகையில், "நானும் எனது மகனும் 60 முதல் 70 இஸ்லாமியர்களை பத்திரமான இடத்திற்கு அழைத்துச் சென்றோம். சுமார் 20 முறை இதற்காக நாங்கள் கோகுல்பூரி சந்தை பகுதியிலிருந்து கர்தாம்புரி பகுதிக்கு எங்கள் இரு சக்கர வாகனம் மூலம் சென்றுவந்தோம்.
கலவரக்காரர்கள் இங்கு இஸ்லாமியர்கள் இருப்பதைக் கண்டால் விபரீதமான விளைவுகள் ஏற்படும் என்பதால் இங்கிருந்து அவர்களை அழைத்துச் செல்ல முடிவு செய்தோம். தாடி வைத்துள்ள இஸ்லாமியர்களுக்கு டர்பன்களை வழங்கினோம். அப்போதுதான் அவர்களை கலவரக்கார்களால் அடையாளம் காண முடியாது.
நான் 1984ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக நடைபெற்ற வன்முறையை பார்த்தவன். இந்த கலவர சம்பவம் அதைத்தான் எனக்கு நினைவுபடுத்தியது. இங்கிருந்து காப்பாற்றப்பட்டவர்களை மனிதர்களாகவே நாங்கள் பார்த்தோம். அவர்களின் மதம் எங்களுக்குத் தெரியவில்லை" என்றார்.
இதையும் படிங்க: இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு - விஎச்பி கடும் தாக்கு!