சமீபத்தில் மத்திய அரசு நிறைவேற்றிய வேளாண் சட்டங்களுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், பல விவசாய அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றன. பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. இதுதொடர்பாக பஞ்சாப் முதலமைச்சர் தலைமையிலான குழுவினர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திக்க முயன்றபோது அனுமதி மறுக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று, டெல்லி ஜந்தர்மந்தரில் முதலமைச்சர் அமரீந்தர் சிங் தலைமையில் 'ரிலே தர்ணா நடைபெற்றது. இதில், பஞ்சாபில் உள்ள அனைத்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள், எம்பிக்கள் கலந்துகொண்டனர். இதில் கலந்துகொள்வதற்காக டெல்லி வந்த பஞ்சாப் சுற்றுலாத் துறை அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்தை, எல்லையில் காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர்.
இதையடுத்து, கடும் வாக்குவாதங்களுக்குப் பிறகே அமைச்சர், அவரது ஆதரவாளர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். இதே நிலைமைதான், பஞ்சாபிலிருந்து வந்த மற்ற சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் ஏற்பட்டது எனக் கூறப்படுகிறது.
இது குறித்து பேசிய அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து, "மத்திய அரசு எங்கள் விவசாயிகளின் உரிமைகளை கொள்ளையடிக்கிறது. அவர்களுக்காக நாங்கள் வருத்தப்படுகிறமே தவிர அனுதாபம் காட்டவில்லை" எனத் தெரிவித்தார்.