2018ஆம் ஆண்டு கர்நாடகாவில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் காங்கிரஸின் ஆதரவுடன் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சியமைத்தது. சிறு சிறு பூசல்களுடன் சென்றுகொண்டிருந்த கர்நாடக அரசியலில் மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர் பெரும் குழப்ப மேகங்கள் சூழ்ந்தன. இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வியடைந்த காரணத்தால் குமாரசாமி அரசு கவிழ்ந்தது.
மேலும், 105 சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவுடன் பாஜக அரசு ஆட்சி அமைக்க உரிமைகோரியுள்ளது. எடியூரப்பா இன்று மாலையே பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இதுகுறித்து காங்கிரஸின் முக்கிய தலைவரும் கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சருமான சித்தராமையா தனது ட்விட்டர் பக்கத்தில், "கர்நாடக சட்டப்பேரவை பாஜகவின் சோதனைக் கூடமாக மாறியுள்ளது. பாஜக ஆட்சியமைக்க முறையற்ற வழிகளை ஆளுநர் கையாள்கிறார்" என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், "வெறும் 105 உறுப்பினர்களின் ஆதரவைக் கொண்டு எப்படி பாஜகவால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியும்?" என்றும் சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார்.
.