இந்தியாவில் கரோனா தொற்றின் தாக்கம் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. இதனால் பள்ளிகள், கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட முடியாத நிலையில் உள்ளன. மாணவர்களுக்கு இணைய வசதியின் மூலம் சில தனியார் பள்ளிகள் வகுப்புகள் எடுத்து வரும் சூழலில், மகாராஷ்டிரா மாநில கல்வித் துறை அலுவலர்களால் சமீபத்தில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது.
அதில், மாணவர்கள் ஆன்லைன் வழியாக கல்வி கற்க போதுமான வசதி உள்ளதா என்று ஆய்வு நடத்தப்பட்டது. இந்நிலையில், இந்த ஆய்வின் முடிவுகள் பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் அமைந்துள்ளன. இதன்படி, மகாராஷ்டிராவில் உள்ள 61 சதவிகித மாணவர்கள் வாட்ஸ் ஆப் வசதியை பயன்படுத்துகின்றனர். மீதமுள்ள 39 சதவிகித மாணவர்கள் வாட்ஸ் அப் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளனர். மேலும், இந்த 39 சதவிகித மாணவர்களில் 31 சதவிகிதத்தினர் அலைபேசி வசதி இல்லாமல் உள்ளனர்.
தவிர, கிட்டதட்ட 35 சதவிகித மாணவர்களின் வீடுகளில் தொலைக்காட்சி வசதி இல்லை. பழங்குடி, கிராமப்புற மாணவர்களில் 10 சதவிகிதம் பேர் வீடுகளில் தொலைக்காட்சி, ரேடியோ, அலைபேசி என எவ்வித வசதிகளும் இல்லாமல் கல்வி கற்று வருவதும் இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இதனால் ஆன்லைனில் மாணவர்களுக்கு வகுப்பு எடுத்தால் ஒரு சாரார் மட்டுமே பயன் பெறுவர் என்பது தெரிய வந்துள்ளது. ஆன்லைன் வகுப்புகள் குறித்து விரைவில் முடிவுகள் எடுக்கப்படும் எனவும் அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : 'புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவ வசதியில்லையா? அல்லது மனம் இல்லையா?'