மத்தியப் பிரதேசத்தில் காங்கிரசிலிருந்து ஜோதிராதித்ய சிந்தியா தன் ஆதாரவாளர்கள் 22 பேருடன் வெளியேறியதால், கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து, சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக அரசு ஆட்சியமைத்தது. அதிலிருந்தே அமைச்சரவையில் இடம்பிடிக்க பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்களிடையே போட்டாபோட்டி நடந்துவந்தது.
ஒரு வழியாக கடந்த இரு வாரங்களுக்கு முன் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்த விவகாரத்தின் பரபரப்பு அடங்குவதற்குள் காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத் தலைவரைத் தேர்வு செய்திருக்கிறது.
இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், காங்கிரஸ் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர், முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகானின் மனைவியுடைய சகோதரர் சஞ்சய் மசானி ஆவார். இவர் இடைத்தேர்தல் பிரசாரத்தின் ஒருங்கிணைப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இதனை கட்சியின் மாநில தலைவர் கமல் நாத் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
ஏற்கனவே, காலியாக உள்ள 22 தொகுதிகள் உள்பட 25 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இரு கட்சிகளும் இத்தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததால், தீவிர பிரசாரத்தில் களமிறங்கியுள்ளன. இச்சூழலில், காங்கிரஸ் கட்சி தேர்தல் வியூகத்தின் ஒருபகுதியாக மசானியின் நியமனம் பார்க்கப்படுகிறது.
மகாராஷ்டிரா மாநிலம் கோண்டியா பகுதியைச் சேர்ந்த மசானி, 2018ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். மேலும் வாரசோனி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால், அவர் தோல்வியுற்றார்.
இதையும் படிங்க: ம.பி.யில் விவசாயிகளை தாக்கிய விவகாரம்: ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் இடமாற்றம்!