ஏப்ரல் 11ஆம் தேதியிலிருந்து நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதற்கு அனைத்துக் கட்சிகளும் தயாராகி வருகின்றன. நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலுக்காக போட்டி போட்டு தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகின்றன.
குஜராத் மாநிலத்தில் 26 மக்களவைத் தொகுதிகளுக்கான பொதுத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் சிவராஜ் சிங் சவுகான் குஜராத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறுகையில்" மத்தியப்பிரதேசத்தில் நடைபெற்ற சட்டபேரவை தேர்தலின் போது, காங்கிரஸ் கட்சி மத்தியபிரதேசத்தில் ஆட்சி அமைத்தால் விவசாயக் கடன் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என்று கூறினார்.
தற்போது விவசாயிகள் வறுமையின் காரணமாக தற்கொலை செய்து வருகின்றனர். விவசாய கடன் தள்ளுபடிக்காக காத்திருக்கின்றனர். ஆனால் இது வரை விவசாயக்கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை. கடன் எப்போது தள்ளுபடி செய்யப்படும் என்று விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
ஆனால் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி பொய் பிரச்சாரம் செய்து மக்களை ஏமாற்றிவிட்டார். அப்பாவி விவசாயிகளை ஏமாற்றிய ராகுல் காந்திக்கு 'உலகின் மிகப் பெரிய பொய்யருக்கான விருதை' வழங்க வேண்டும்" என அவர் தெரிவித்தார்.