அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, 'எ ப்ராமிஸ்ட் லேண்ட்' என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். அதில், மற்றவர்களை ஈர்க்க ஆர்வம் காட்டும் ராகுல் காந்திக்கு, ஒரு விவகாரத்தைப் புரிந்துகொள்ளும் அளவுக்கு நாட்டமோ பக்குவமோ இல்லை என ஒபாமா தெரிவித்திருந்தார். இந்த விவகாரத்தை முன்வைத்து ராகுல் காந்தியை பாஜக கடுமையாக விமர்சித்துவருகிறது.
இந்நிலையில், ராகுல் காந்தி குறித்து விமர்சன கருத்து தெரிவித்துள்ள ஒபாமாவுக்கு இந்தியா குறித்த புரிதல் உள்ளதா என சிவசேனா மூத்தத் தலைவர் சஞ்சய் ராவத் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "இந்திய தலைவர்கள் குறித்து வெளிநாட்டு அரசியல்வாதிகள் இம்மாதிரியான கருத்து தெரிவிக்கக் கூடாது.
ராகுல் காந்தி குறித்த ஒபாமாவின் விமர்சனம் வெறுக்கத்தக்க விதமாக உள்ளது. ட்ரம்ப் ஒரு பைத்தியம் என நாங்கள் கூறமாட்டோம். இந்தியா குறித்து ஒபாமாவுக்கு என்ன தெரியும்?" என்றார்.
காங்கிரஸ் மூத்தத் தலைவர் தாரிக் அன்வர் இது குறித்து கூறுகையில், "பத்தாண்டுகளுக்கு முன்பு ஒபாமா அதிபராக இருக்கும்போது ராகுல் காந்தியை அவர் சந்தித்திருக்கலாம். ஒரு சில சந்திப்புகளின் மூலமாக ஒருவரை மதிப்பிட முடியாது. அதன் பிறகு ராகுல் காந்தி பெரிய அளவில் மாற்றம் கண்டுள்ளார். அவர் நிறைய அனுபவங்களைப் பெற்றுள்ளார்" என்றார்.