சிவசேனா தலைமையிலான மகாராஷ்டிரா அரசானது தனது 'ஷிவ் போஜன்' திட்டத்தை அறிமுகப்படுத்தியது. நாட்டின் 71ஆவது குடியரசு தினத்தையொட்டி ஏழை மக்களுக்கு ரூ. 10க்கு உணவு வழங்குவதை நோக்கமாக வைத்து இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மூன்று மாத கால சோதனை முயற்சியாக இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக நியமிக்கப்பட்டுள்ள மையங்களில் அல்லது கேன்டீன்களில் குறிப்பிட்ட ஒரு நேரத்தில் மக்களுக்கு உணவு வழங்கப்படும்.
இத்திட்டமானது தேசியவாத காங்கிரஸ் கட்சியின் கூட்டணியில் இருக்கும் சிவ சேனா கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாகும்.
இதையடுத்து மும்பை நாயர் மருத்துவமனையில் குறைந்த விலையில் கிடைக்கும் ஷிவ் போஜன் தாளி (உணவு வகை) கேன்டீனை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான அஸ்லாம் ஷா தொடங்கி வைத்தார்.
இதேபோன்ற உணவு மையத்தை மும்பை - பாந்த்ராவிலுள்ள ஆட்சியர் அலுவலகத்தில் மகாராஷ்டிரா சுற்றுலா மற்றும் சுற்றுச்சூழல் அரசாங்க அமைச்சர் ஆதித்யா தாக்கரே திறந்து வைத்தார். மாநிலத்தில் உள்ள பல மாவட்டங்களில் இது போன்ற உணவு வழங்கும் மையத்தை அமைச்சர்களும் முக்கிய அரசியல் பிரமுகர்களும் தொடங்கி வைத்தனர்.
ஒரு ப்ளேட்டுக்கு இரண்டு சப்பாத்தி, ஒரு காய்கறி வகை, பருப்பு வகை, சாப்பாடு ஆகியவை இதில் கிடைக்கும். மதியம் 12 மணி முதல் 2 மணி வரை இந்த உணவு கிடைக்கும் எனக் கூறப்பட்ட நிலையில், ஒரு நாளைக்கு சுமார் 500 உணவுகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட நாளில் பல இடங்களில் ஏராளமான மக்கள் திரண்டனர்.
மூன்று மாத கால சோதனைத் திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டத்திற்கு சுமார் ரூ.6.4 கோடி செலவாகும் எனக் கூறப்பட்டுள்ளது. ஒரு தாளி 10 ரூபாய்க்கு வழங்கப்பட்டாலும் அதன் சரியான விலை நகர்ப்புறங்களில் 50 ரூபாயாகவும், கிராமப்புறங்களில் 35 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மீதித் தொகை மாவட்ட ஆட்சியருக்கு மானியமாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களிடம் கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து, மாநிலத்தின் பிற பகுதிகளிலும் உணவு வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. ஏழை மக்கள் அதிகம் புழங்கும் சந்தைகள், பேருந்து நிலையங்கள், அரசு அலுவலகங்கள் ஆகிய இடங்களில் இந்த குறைந்த விலை உணவு வழங்கப்படவுள்ளது.
இத்திட்டமானது தமிழ்நாட்டில் அமல்படுத்தப்பட்ட 'அம்மா உணவக' திட்டத்தைப் போன்றதாகவே இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: இந்தியாவுக்கு வலுவான எதிர்க்கட்சி தேவை - அபிஜித் பானர்ஜி