மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். இதையடுத்து திருமணமாகி முதல் முறை கணவருடன் இணைந்து துர்கா பூஜையை கொண்டாடியுள்ளார் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நுஸ்ரத் ஜஹான்.
அதனை தொடர்ந்து நுஸ்ரத் அவரது கணவர் நிகிலுடன் மேளம் இசைத்து, நடனமாடி கோலாகலமாக துர்கா பூஜையைக் கொண்டாடினார். அவர் நடனமாடுவது மட்டுமல்லாமல், கணவருடன் இணைந்து மேளம் இசைத்த காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது.
இது தொடர்பாக உத்தரப் பிரதேச இஸ்லாமிய மதகுரு கூறியதாவது, 'நுஸ்ரத் இஸ்லாமிய மதத்தை அவமானப்படுத்தும் விதமாக செயல்பட்டுள்ளார். அவர் திருமணம் செய்திருப்பது இந்து மதத்தைச் சார்ந்த தொழிலதிபர் நிகில் ஜெயினை என்றாலும், நுஸ்ரத் இஸ்லாமிய மதத்தைச் சார்ந்த பெண். நுஸ்ரத் வேண்டுமென்றால் பெயரையும், மதத்தையும் மாற்றிக்கொள்ளட்டும். ஆனால் இஸ்லாமியராக இருந்து கொண்டு துர்கா பூஜையில் நடனமாடி கொண்டாடுவது இஸ்லாமியத்தை அவமானப்படுத்தும் நோக்கத்தோடு இருக்கின்றது' என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.
முன்னதாக நாடாளுமன்றத்தில், நுஸ்ரத் ஜஹான் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றபோது தாலி அணிந்து, மருதாணி வைத்துக் கொண்டு, நெற்றியில் குங்குமம் இட்டு வந்ததை இஸ்லாமியர்கள் பலரும் விமர்சனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'எந்த விமர்சனத்திற்கும் பயப்பட மாட்டேன்..!' - நுஸ்ரத் ஜஹான் எம்பி பதிலடி