டெல்லியைத் தொடர்ந்து மூன்று முறை ஆட்சி செய்தவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர்களில் ஒருவருமான ஷீலா தீட்சித் நேற்று காலமானார். நாட்டையே அதிரவைத்த நிர்பயா பாலியல் வன்கொடுமை இவர் ஆட்சியில்தான் நடந்தது.
இதுபற்றி இவர் எழுதிய சுயசரிதை புத்தகத்தில், "2013ஆம் ஆண்டு இருதய அறுவை சிகிச்சை செய்தாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன். அரசியலிலிருந்து முழுமையாக விலக குடும்பத்தினர் ஆலோசனை கூறினர். ஆனால் அப்போதுதான் நிர்பயா பாலியல் வன்கொடுமை நடந்தது.
நான் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இருந்தேன். முன்னதாக முடிவெடுத்தபடி அரசியலிலிருந்து முழுமையாக விலக குடும்பத்தினர் நிர்பந்தித்தனர்.
அந்தச் சமயத்தில் அரசியலிலிருந்து விலகுவது சரியாக இருக்காது என நினைத்தேன். எனவே, உடல்நலக்குறைவின் போதும் அரசியல் களத்தில் தொடர்ந்து பயணித்தேன். பின்னர், 2013ஆம் ஆண்டு டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தேன்.
எனது சொந்தத் தொகுதியை அரவிந்த் கெஜ்ரிவாலிடம் இழந்தேன். அந்தத் தேர்தலில் காங்கிரஸ் தோற்றதற்கு மிக முக்கியக் காரணம் முதல் முறை வாக்காளர்கள். அவர்கள் யாரும் என் ஆட்சி காலத்திற்கு முன்பு இருந்த டெல்லியை பார்த்திருக்க மாட்டார்கள்" என குறிப்பிடப்பட்டுள்ளது.