சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூரில் மத்தியப் பிராந்திய கவுன்சிலின் 22ஆவது கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், மத்தியப் பிராந்திய கவுன்சிலில் இடம்பெற்றுள்ள மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர், ஒவ்வொரு மாநிலங்களிலிருந்தும் 2 அமைச்சா்கள், தலைமைச் செயலர்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனர்.
இந்தச் சந்திப்புக்கு உள் துறை அமைச்சர் அமித் ஷா தலைமை தாங்கினார். பொதுநலன்களின் முக்கியமான பிரச்னைகள் குறித்து விரிவான கலந்துரையாடல் நடைபெற்றது. மேலும், பாதுகாப்பு, உள்கட்டமைப்பு உள்ளிட்ட துறைகளின் மேம்பாடு தொடா்பாக யோசனைகள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.
மத்தியப் பிராந்திய கவுன்சில் கூட்டத்தில், நான்கு மாநில முதலமைச்சர்களும் பல்வேறு விவகாரங்களை முன்வைத்தனர். இதில் உள்கட்டமைப்பு, பாதுகாப்பு, சுற்றுச்சூழல் தொடர்பான விவகாரங்கள் விரிவாக விவாதிக்கப்பட்டன.
கூட்டத்தில் அமித்ஷா, வனத் துறை தொடர்பான பிரச்னைகளை விரைவாகத் தீர்க்கவும், ஒவ்வொரு கிராமத்திலும் ஐந்து கிலோமீட்டர் சுற்றளவில், குறிப்பாக நக்சல் பகுதிகளில் செங்கல், மோட்டார் வங்கி வசதியை வழங்கவும் அவர் உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தினார்.
போக்சோ சட்டத்தின்கீழ் உள்ள வழக்கு விசாரணையை இரண்டு மாத காலங்களுக்குள் முடிக்கமாறும், சி.ஆர்.பி.சி., ஐ.பி.சி. ஆகியவற்றின் விரிவான திருத்தங்களுக்கான பரிந்துரைகளை அனுப்புமாறு மாநிலங்களிடம் வேண்டுகோள்விடுத்தார். மேலும் விவசாயிகளுக்கு உடனடியாகப் பணம் செலுத்துமாறும் கேட்டுக்கொண்டார்.
அனைத்து மாநிலங்களுடன் சிறப்பான ஒருங்கிணைப்பைப் பராமரிக்க வேண்டும் என்று மத்திய அரசு விரும்புவதாகச் சொன்ன அவர், அனைத்து நிலைகளிலும் மாநிலங்கள் சிறப்பாகச் செயல்பட மத்திய அரசு உதவும் என்றார். பட்ஜெட் நிதி ஒதுக்கீடாக இருந்தாலும் சரி, வளா்ச்சி மற்றும் சட்டம்-ஒழுங்கு விவகாரங்களாக இருந்தாலும் சரி, மாநில அரசுகளுக்கு துணை நிற்பதே மத்திய அரசின் நோக்கமாகும் எனத் தெரிவித்தார்.
மத்திய அரசுக்கும், மாநிலங்களுக்கும் இடையே ஏற்படும் பிரச்னைகள், கருத்து வேறுபாடுகளுக்குத் தீா்வு காண்பதே பிராந்திய கவுன்சில்களின் பணியாகும் எனக் கூறிய அவர், மத்தியப் பிராந்திய கவுன்சில் தவிர, வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு, வடகிழக்கு ஆகிய பிராந்திய கவுன்சில்களும் உள்ளதாகச் சுட்டிகாட்டினார்.
மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையே சிறப்பான ஒருங்கிணைப்பை பேணுவதற்காக இதுபோன்ற கூட்டங்களைத் தொடா்ந்து நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதையும் அவர் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: பாஜகவின் முக்கியப் புள்ளிகள் பரப்புரையில் ஈடுபட தடை