Latest National News காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ பாஜக அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் ரத்து செய்தது. இதுகுறித்து விளக்க பாஜக நாடு முழுவதும் கூட்டங்களை நடத்திவருகிறது.
இந்நிலையில், சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டு இரண்டு மாதங்களான நிலையில், ஜம்மு-காஷ்மீரின் கள நிலவரம் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா, காஷ்மீர் பாஜக தலைவர்களுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.
இதில் ஜம்மு - காஷ்மீர் பகுதியை சேர்ந்த முக்கிய பாஜக தலைவர்கள் பலர் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில், காஷ்மீரில் தற்போது நிலவும் நிலைகுறித்தும், காஷ்மீரில் வரும் 24ஆம் தேதி நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
காஷ்மீரிலுள்ள பள்ளிகளை விரைவில் திறக்கவும், நிலைமையை சுமூகமாக்கவும் உரிய நடவடிக்கைகளை எடுக்க அமித் ஷா வலியுறுத்தினார். மேலும், காஷ்மீர் அரசு ஊழியர்கள் உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும் என்றும் அவர் கூறினார்.
உள்ளாட்சித் தேர்தலில் சுமார் 90 சதவிகித இடங்களை வெல்லத் திட்டமிட்டிருக்கும் பாஜக, மாவட்ட மற்றும் வட்ட நிர்வாகிகளுக்குக் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரத்தை உயர்த்தவேண்டும் என்றும் கூறினார்.
காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் பாஜக தன்னை வளர்த்துக்கொள்ள பெரும் முயற்சிகளைக் கடந்த சில வருடங்களாகவே எடுத்துவருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்கலாமே: சரியும் மரங்களும் வளரும் கட்டிடங்களும் - மெட்ரோ நகர் மும்பை!