'ராம் சியா கே லவ் குஷ்' என்ற தொலைக்காட்சி தொடரில் வால்மீகி சமூகம் தவறாக சித்தரிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து, பஞ்சாப் மாநிலத்தின் பல பகுதிகளில் வால்மீகி சமூக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த தொடரில் வரலாறு திரிக்கப்பட்டுள்ளதாகவும், வால்மீகி சமூகத்திற்கு எதிரான கருத்துகள் இடம்பெற்றுள்ளதாகவும் வால்மீகி செயல் குழு என்ற அமைப்பு குற்றஞ்சாட்டியிருந்தது. இதனைத் தொடர்ந்து நேற்று பந்த் அறிவிக்கப்பட்டது. இதனால் ஜலந்தர், அமிர்தசரஸ், பேரோஷ்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன. இந்த வன்முறை சம்பவத்தின்போது ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டார்.
இந்நிலையில், பஞ்சாப் முதலமைச்சர் அம்ரிந்தர் சிங், சமூக அமைதியை கெடுக்கும் எதனையும் பொறுத்துக் கொள்ள முடியாது. எனவே, 'ராம் சியா கே லவ் குஷ்' என்ற சீரியலுக்கு தடை விதிக்கப்படுகிறது என அறிவித்துள்ளார்.