2009ஆம் ஆண்டு, கேரள மாநிலம், காசர்கோடு நகரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில், சீரியல் கொலையாளி 'சயனைடு' மோகனை குற்றவாளியாக அறிவித்து அம்மாநில நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சயனைடு மோகனால், பல பெண்கள் ஏமாற்றப்பட்டு பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டும், சயனைடு விஷம் கொடுத்து கொல்லப்பட்டும் உள்ளனர். இவ்வழக்கு மோகன் மீது பதியப்பட்ட 20ஆவது மற்றும் கடைசி வழக்கு என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வழக்கில் வருகிற ஜூன் 24ஆம் தேதி தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2009ஆம் ஆண்டு சயனைடு அளித்து கொலை செய்யப்பட்ட பெண்ணும் மோகனும் நெருங்கிப் பழகி வந்த நிலையில், மோகன் அப்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக, அவருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் உறுதி அளித்துள்ளார்.
காசர்கோட்டில் பெண்கள் தங்கும் விடுதி ஒன்றில் பணிபுரிந்து வந்த அவரை, 2009ஆம் ஆண்டு ஜூலை எட்டாம் தேதி பெங்களூருக்கு அழைத்துச் சென்ற மோகன், பெண்ணின் குடும்பத்தாரிடம் இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும், விரைவில் இருவரும் வீடு திரும்புவதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து அப்பெண்ணை பெங்களூரு பேருந்து நிலையத்துக்கு அருகே இருந்த லாட்ஜ் ஒன்றுக்கு அழைத்துச் சென்று ஆசை வார்த்தைகள் கூறி அவருடன் உடல் ரீதியாக உறவுகொண்ட சயனைடு மோகன், அப்பெண்ணின் நகைகளை அறையிலேயே வைத்து விட்டு அப்பெண்ணை வீடு திரும்பும்படி தெரிவித்துள்ளார்.
மேலும், கருத்தடை மாத்திரை என அப்பெண்ணை நம்பவைத்து, சயனைடு கலந்த மாத்திரையை அவருக்கு அளித்து விழுங்க வைத்து விட்டு பேருந்து நிலையத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளார் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர், மாத்திரை விழுங்கி மயங்கி விழுந்த அப்பெண்ணை காவல் கண்காணிப்பாளர் ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும், ஆனால் வழியிலெயே அவர் இறந்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, அக்டோபர் 2009ஆம் ஆண்டு மோகன் கைது செய்யப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரி, மோகனின் புகைப்படங்களைப் பார்த்து, அவரை அடையாளம் கண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து குற்றவியல் துறை இவ்வழக்கை கையில் எடுத்து விசாரணையை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மனைவியை அடித்துக் கொலைசெய்த கணவர் தற்கொலை!