பிகார் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் விரைவில் நடக்கவுள்ளது. இதனால் தினந்தோறும் பிகார் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் எதிர்கட்சியைச் சேர்ந்த பல முக்கிய நிர்வாகிகள் ஆளும் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இணைந்துள்ளனர்.
அதில் ராஷ்ட்டிரிய ஜனதா தளம் கட்சியின் முக்கியத் தலைவர் போலா ராய், ராஷ்டிரிய லோக் சம்தா கட்சியஞ் அபிஷேக் ஜா, காங்கிரஸ் கட்சியின் பூர்ணிமா யாதவ், சுதர்சன் ஆகியோர் ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் மூத்த தலைவர் லல்லன் சிங் (Lalan Singh) முன்னிலையில் கட்சியில் இணைந்தனர். இதுகுறித்து லல்லன் சிங் பேசுகையில், '' கட்சியில் புதிதாக இணைந்துள்ள தலைவர்களை வரவேற்கிறேன். இதுவெறும் ட்ரைலர் தான். இதன் முழுப்படமும் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்'' என்றார்.
இதனால் வரும் காலங்களில் எதிர்கட்சியிலிருந்து பலரும் ஆளும் கட்சியான ஐக்கிய ஜனதா தள கட்சிக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக ராஷ்ட்டிரிய ஜனதா தள கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ரகுவன்ஷ் பிரசாத் சிங் கட்சியிலிருந்து விலகுவதாக திடீர் அறிவிப்பை வெளியிட்டார். கட்சித் தலைவரும் பிகார் முன்னாள் முதலமைச்சருமான லாலு பிரசாத்தின் முக்கிய சகாவான ரகுவனஷ் பிரசாத்தின் இந்த அறிவிப்பு பிகார் அரசியலில் பெரும் பரபரப்பை கிளப்பியது.
இதையும் படிங்க: உ.பி.,யில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு சொத்துரிமை வழங்க சட்டத்திருத்தம்!