கரோனா பெருந்தொற்று காரணமாக மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள சூழலில், அனைத்துவிதமான பயணிகள் ரயில் சேவையும் முடக்கப்பட்டன.
இதற்கிடையே, வெளிமாநிலங்களில் தவித்துவரும் குடிபெயர்ந்த தொழிலாளர்களைச் சொந்த மாநிலங்களுக்குத் திருப்பி அனுப்பும் நோக்கில் கடந்த 1ஆம் தேதிமுதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுவருகின்றன.
பயணிகள் ரயில் சேவை முடக்கப்பட்டு ஏறக்குறையை இரண்டு மாதங்கள் கழித்து இன்று முதல் 15 ஜோடி சிறப்பு ரயில்கள் இயக்க மத்திய ரயில்வே துறை முடிவுசெய்துள்ளது.
இந்த ரயில்கள் டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, செகந்தரபாத், திருவனந்தபுரம், அகமதாபாத், ஹவுரா (கொல்கத்தா), பாட்னா, ராஞ்சி, பிலாஸ்பூர், மடகோன், திப்ரூகர்க், ஜம்மு தாவி, அகர்தலா ஆகிய முக்கிய நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடைப்பிடிக்க வேண்டியவை:
இந்தச் சிறப்பு ரயில் பயணம் மேற்கொள்ள வரும் பயணிகள் அனைவரும் ரயில் நிலையங்களில் பரிசோதனைசெய்யப்பட்டு நோய்த்தொற்று இல்லையெனக் கண்டறியப்பட்ட பிறகே பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர்.
பயணிகள் முகக்கவசம் அணிவது, தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிப்பது, செல்போன்களில் ஆரோக்கிய சேது செயலியைத் தரவிறக்கம் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மேலும், தங்களுக்குத் தேவையான உணவு, தண்ணீர், போர்வை, பாதுகாப்பு உபகரணங்களைக் கொண்டுவர பயணிகளுக்கு ரயில்வே துறை அறிவுறுத்தியுள்ளது.
தற்போதைய நிலவரப்படி, மே 12 முதல் மே 20ஆம் தேதி வரைக்கான கால அட்டவணையை ரயில்வே வெளியிட்டுள்ளது.
- அந்த அட்டவணைப்படி மே 16, 19 ஆகிய தேதிகளில் ரயில் சேவை கிடையாது.
கால அட்டவணை
மே 12
டெல்லியிலிருந்து மூன்று ரயில்கள் புறப்பட்டு திப்ரூகர்க், பெங்களூரு, பிலாஸ்பூர் ரயில் நிலையங்களைச் சென்றடையும். ராஜேந்திர நகர் (பாட்னா), பெங்களூரு, மும்பை சென்ட்ரல், அகமதாபாத் ஆகிய ரயில் நிலையங்களிலிருந்து தலா ஒரு ரயில் புறப்பட்டு டெல்லியைச் சென்றடையும்.
மே 13
டெல்லியிலிருந்து ஹவுரா, ராஜேந்திர நகர், ஜம்மு தாவி, திருவனந்தபுரம், சென்னை, ராஞ்சி, மும்பை, அகமதாபாத் ஆகிய பகுதிகளுக்கு தலா ஒரு ரயில் இயக்கப்படும். இதனிடையே, புவனேஸ்வரிலிருந்து டெல்லிக்கு ஒரு ரயில் இயக்கப்படும்.
மே 14
திப்ரூகர்க், ஜம்ம தாவி, பிலாஸ்பூர், ராஞ்சி ஆகிய நகரங்களிலிருந்து தலா ஒரு ரயில் டெல்லிக்குப் புறப்படும். டெல்லியிலிருந்து புவனேஸ்வருக்கு ஒரு ரயில் புறப்படும்.
மே 17
மடகோன் நகரிலிருந்து டெல்லிக்கு ஒரு ரயில் புறப்படும். மேலும், டெல்லியிலிருந்து செகந்தராபாத்துக்கு ஒரு ரயில் புறப்படும்.
மே 18
அகர்தலா பகுதியிலிருந்து டெல்லி, டெல்லியிலிருந்து அகர்தலாவுக்கு தலா ஒரு ரயில் இயக்கப்படும். இதுதவிர, செகந்தராபாத்திலிருந்து டெல்லிக்கு ஒரு ரயில் இயக்கப்படும்.
இந்தச் சிறப்பு ரயில்களில் குளிர்சாதன வகுப்புகள் மட்டுமே உள்ளன. கட்டணம் ராஜதானி ரயில் கட்டணத்துக்கு நிகராக வசூலிக்கப்படும்.
இந்த ரயில்களில் பயணம்செய்ய பயணிகள் ஏழு நாள்களுக்கு முன்பிருந்தே முன்பதிவு செய்யலாம். RAC, WAITING LIST (WL) கிடையாது. முன்பதிவு செய்யாமல் ரயிலில் பயணம்செய்ய அனுமதி கிடையாது.