சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜம்முவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், அதி விரைவுக் குழுவையும் காவல் துறை பயன்படுத்தியுள்ளது. பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் காரணமாக சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜம்முவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
ஜம்முவில் சுதந்திர தினத்தன்று முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுவது மினி ஸ்டேடியத்தில் நடைபெறும் அணிவகுப்பு. இதனால் அப்பகுதி மூடப்பட்டுள்ளது, சில நூறு நபர்களை மட்டுமே சுதந்திர தின விழாவுக்கு அனுமதிக்க ஜம்மு நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து காவல் துறை தரப்பில், ஜம்மு - பதான்கோட் மற்றும் ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் வரும் வாகனங்கள் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. காவலர்கள், மத்திய ஆயுதப் படை பிரிவு காவலர்கள் 24 மணி நேர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சந்தேகப்படும்படியான நடவடிக்கைகள் தென்பட்டால் உடனடியாக காவலர்களுக்கு தகவலளிக்கும்படி பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.