சத்தீஸ்கர் மாநிலத்தில், நக்சலைட்டுகளின் தாக்குதல் சமீப காலங்களில் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் அம்மாநிலத்தின் டான்டேவாடா மாவட்டத்தில் காவல் துறையினர் மற்றும் பாதுகாப்புப் படையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
இச்சோதனையின்போது பாஞ்சாலி கிராமத்தில் புதைத்து வைக்கபட்டிருந்த சுமார் 4 கிலோ அளவிலான மிகவும் சக்திவாய்ந்த மேம்படுத்தப்பட்ட வெடிகுண்டை(ஐஇடி) பாதுகாப்புப் படையினர் மீட்டு, அதனை செயலிழக்க செய்தனர்.
இதுகுறித்து அம்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் பல்லவ் கூறுகையில், 'டான்டேவாடா மாவட்டத்தின் பாஞ்சாலி கிராமத்தில், மாவட்ட ஆயுத பாதுகாப்புப் படையினர் (டி.ஆர்.ஜி) நடத்திய சோதனையின் விளைவாக ஐஇடி ரக வெடிகுண்டு மீட்கப்பட்டு, செயலிழக்கப்பட்டது' என்று தெரிவித்தார்.
முன்னதாக, ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில், நேற்று (ஜூலை 5) நடந்த ஐஇடி குண்டுவெடிப்பில் மத்திய ஆயுத பாதுகாப்புப் படையின் (சிஆர்பிஎஃப்) ஒரு வீரர் காயமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.