ஜம்மு-காஷ்மீரில் ரஜோரி மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி நாச வேலைகளில் ஈடுபட்டுவருவதாக பாதுகாப்புப் படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் இன்று தேடுதல் வேட்டை நடைபெற்றது. அப்போது பயங்கரவாதிகள் பயன்படுத்திய பதுங்குமிடத்தை அவர்கள் கண்டறிந்தனர். அங்கிருந்து ஏகே-47 ரக துப்பாக்கிகள், கிரனேட் லாஞ்சர்கள், கையெறி குண்டுகள், வெடிகுண்டு தயாரிக்கும் உபகரணங்கள் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டன.
அங்கு பயங்கரவாதக் குழுவைச் சேர்ந்த யாரும் பிடிபடாத நிலையில், அவர்கள் அருகில்தான் பதுங்கியிருக்க வேண்டும் என்ற நோக்கில் தேடுதல் வேட்டையைப் பாதுகாப்புப் படையினர் துரிதப்படுத்தியுள்ளனர்.
காஷ்மீர் பகுதியில் பாதுகாப்புப் படையினர் கடந்த மூன்று மாதங்களாக மேற்கொண்ட தேடுதல் வேட்டையில் சுமார் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். சட்டப்பிரிவு 370 நீக்கத்திற்குப் பிறகு அங்கு பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
இதையும் படிங்க: 6 வயது சிறுவன் தாத்தாவை ஸ்ட்ரெச்சரில் இழுத்துச்சென்ற விவகாரம்: வார்டு ஊழியர் சஸ்பெண்ட்!