கல்வியாளர் கே.கஸ்தூரிரங்கன் தலைமையிலான குழு, கடந்த ஆண்டு மே 31ஆம் தேதி அளித்த அறிக்கையின் அடிப்படையில் மத்திய அரசு புதிய கல்விக் கொள்கை வரைவை கடந்த ஆண்டு வெளியிட்டது.
இது தொடர்பாக பொதுமக்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க ஏதுவாக, கடந்த ஆண்டு புதிய கல்விக் கொள்கை வரைவு வெளியிடப்பட்டது. தொடர்ந்து இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் நாடு முழுவதும் பலரும் கருத்துக்களைத் தெரிவித்தனர். சமீபத்தில், மத்திய அமைச்சரவை இந்த புதிய கல்விக் கொள்கைக்கு ஒப்புதல் அளித்தது.
இந்நிலையில், தற்போது புதிய கல்விக் கொள்கை குறித்து ஆசிரியர்களை கருத்து தெரிவிக்கும்படி மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக மத்தியக் கல்வி அமைச்சக செயலர் அனைத்து மாநில கல்வித் துறை செயலர்களுக்கும் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், "நாளை (ஆக. 24) முதல் 31ஆம் தேதி வரை பள்ளி முதல்வர்களும் ஆசிரியர்களும் புதிய கல்விக் கொள்கை தொடர்பான தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க innovateindia.mygov.in/nep2020 என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு ஒவ்வொரு தலைப்பின் கீழும் கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு தங்களுடைய கருத்துக்களைத் தெரிவிக்கலாம்.
ஆசிரியர்கள் அளிக்கும் கருத்துக்களை தேதிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் பரிசீலித்து உரிய கருத்துக்களைத் தெரிவிக்கும். ஆசிரியர்கள் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொள்ளப்படுவார்கள்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒவ்வொரு மாநில அரசும், யூனியன் பிரதேசங்களும் அனைத்து தரப்பு ஆசிரியர்களின் கருத்துக்களையும் பெற்றுத் தர நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'கரோனா பரவலில் தப்லீக் ஜமாத்தினர் பலிகடாவாக்கப்பட்டனர்' - உயர் நீதிமன்றம் காட்டம்