கரோனா வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்களின் பொருளாதாரச் சூழல் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளது. இந்நிலையில் ஊரடங்கு காலத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கான கல்விக் கட்டணத்தைச் செலுத்துவதில் இருந்து விலக்களிக்க வேண்டும் என ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் ராஜீவ் பூஷன் பன்சால் என்பவர் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதிகள் சந்திர குமார் சொங்கரா, சபீனா ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, "கரோனா வைரஸ் சூழலால் மக்களின் பொருளாதாரம் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளது. இதனால் தனியார் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் கல்விக் கட்டணத்தை செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்" என வாதிட்டார்.
இதையடுத்து அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கணேஷ் மீனா, ''தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணத்தைச் செலுத்த மார்ச் 15ஆம் தேதியிலிருந்து மூன்று மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசின் முடிவு ஏப்ரல் 9ஆம் தேதியே அறிவிக்கப்பட்டது'' என்றார்.
இதையடுத்து கல்விக் கட்டணத்தைச் செலுத்துவதிலிருந்து விலக்களிக்க முடியாது என்றும், கட்டணத்தைச் செலுத்தாததால் மாணவர்களின் பெயர்களைப் பட்டியலிலிருந்து நீக்கக் கூடாது எனவும் உத்தரவிட்டு மனுவைத் தள்ளுபடி செய்தனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி