நாட்டின் தலைநகரான டெல்லியில் நேற்று(ஆக.6) பெய்த கன மழை காரணமாக, முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டின் ஒரு பகுதி மேற்கூரை இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அப்பகுதியில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் ஏற்படவில்லை. தற்போது, மேற்கூரையைச் சரிப்படுத்தும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
அதே போல், கழிப்பறையும் சேதம் அடைந்துள்ளதால், அதை சீரமைக்கும் பணிகளும் நடைபெறுகிறது. இதற்கிடையில், பொதுப் பணித்துறை (PWD) அலுவலர்கள், இந்தக் கட்டடம் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். இவர்களின் அறிக்கையை பொறுத்தே கட்டடம் புதுப்பித்தல் பணி நடைபெறும் எனக் கூறப்படுகிறது.
டெல்லியில் ஃபிளாக்ஸ்டாஃப் சாலையில் உள்ள முதலமைச்சர் வசித்து வரும் வீடு, கடந்த 1942இல் கட்டப்பட்டது. தகவல்களின்படி, 1942 முதல் தற்போது வரை அந்த வீட்டில் தற்காலிக பழுதுபார்ப்பு பணி மட்டுமே நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.