அயோத்தி நில உரிமை தொடர்பான வழக்கில், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தைச் சன்னி வக்பு வாரியம், நிர்மோஹி அகாடா மற்றும் ராம் லீலா ஆகிய அமைப்புகள் சமமாகப் பிரித்துக் கொள்ள வேண்டும் என அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு தீர்ப்பளித்தது. ஆனால் தீர்ப்பினை எதிர்த்து அமைப்புகளின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தொடரப்பட்டது.
இந்த வழக்கில் மத்தியஸ்த முயற்சி தோல்வி கண்டதால் உச்ச நீதிமன்றம் இந்த விசாரணையைத் தீவிரப்படுத்தியது. ஆகஸ்ட் 6ஆம் தேதி முதல் அயோத்தி வழக்கு விசாரணை தினந்தோறும் நடந்து வந்தது. 40 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வந்த வழக்கின் விசாரணை அக்டோபர் 16ஆம் தேதி நிறைவடைந்ததை தொடர்ந்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.
இந்நிலையில், நவம்பர் 4 முதல் 17ஆம் தேதிக்குள் உச்ச நீதிமன்றம் தீர்ப்பினை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தீர்ப்பு வெளியாகும்போது அனைத்துத் தரப்பினரும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்று, அமைதி காக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் அதற்காக நவம்பர் மாதத்தின் அனைத்து நிகழ்ச்சிகளையும் ஆர்.எஸ்.எஸ். ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.