ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு பிணை (ஜாமீன்) மறுக்கப்பட்டுவருகிறது.
அண்மையில் (நவ.15) டெல்லி உயர் நீதிமன்றத்தில் பிணை கோரி மனுதாக்கல் செய்தார். அந்த மனு தள்ளபடியானது. தொடர்ந்து அவர் உச்ச நீதிமன்றத்தில் பிணை கோரி மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனு இன்று (நவ.20) விசாரணைக்கு வந்தது.
நீதிபதிகள் பானுமதி, போபணா, கிரிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. அப்போது அமலாக்கத்துறை வழக்கறிஞர் துஷார் மேக்தா ஆஜராகி இந்த மனு (ப.சிதம்பரம் பிணை மனு) குறித்து நவ.25ஆம் தேதி பதிலளிப்பதாக கூறினார். இதையடுத்து நீதிபதிகள் வழக்கை வருகிற 26ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
இந்த மனு அப்போது மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது. ப.சிதம்பரம் பிணை கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், தனக்கு வயது முதிர்வு காரணமாக, தமனி நோய், உயர் இரத்த அழுத்தம், குடல் நோய் மற்றும் வைட்டமின் டி குறைபாடு உள்ளிட்ட வியாதிகள் பல ஆண்டுகளாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் நீதித்துறை காவலில் இருந்தபோது, இரண்டு விதமான நோய்களால் பாதிக்கப்பட்டு ஒருவாரம் மருந்துகள் உட்கொண்டதாகவும், தற்போது 5 கிலோ வரை குறைந்து விட்டதாகவும் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்துக்கு மொரீசியஸ் நாட்டிலிருந்து 3 நிறுவனங்கள் வாயிலாக ரூ.305 கோடி வரை அந்நிய முதலீடு சட்டவிரோதமாக பெறப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதில் நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரத்தின் தலையீடு இருந்தது என்பதே குற்றச்சாட்டு.! இதுதொடர்பாக அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வு குழு (சிபிஐ) ஆகியோர் ப.சிதம்பரத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க : இதுதான் தகவல் அறியும் உரிமை சட்டமா? பா.ஜனதாவுக்கு ப.சிதம்பரம் கேள்வி