கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஏப்ரல் 6ம் தேதி வரை புதிய வரிகள் விதிக்கக் கூடாது என்றும் வங்கிக் கடன்களை வசூலிக்க கூடாது என்றும் கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இது தொடர்பாக கேரள உயர் நீதிமன்றத்தில் ஒருவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதில், “கேரளத்தில் கரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ளது. ஏராளமானோா் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்த சூழ்நிலையில், பொதுமக்களிடமிருந்து கடன்களை வசூலிக்கவும் புதிய வரி விதிப்புகளை மேற்கொள்ளவும் கூடாது” என கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் ஏப்ரல் 6ஆம் தேதி முதல் புதிய வரி விதிப்பு உள்ளிட்டவைகளுக்கு தடை விதித்தார். கேரள உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக டெல்லி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் துஷார் மேத்தா, கரோனா வைரஸ் பாதிப்பால் மக்கள் சந்திக்கும் பிரச்னைகளை அரசு அலுவலர்கள் உணர்ந்துள்ளனர். மக்கள் பிரச்னைகளை சந்திக்காத வகையில் நாங்கள் முறையான வழிமுறைகளை உருவாக்கி வருகிறோம். ஜிஎஸ்டி உட்பட பலவித வரிகளை ஆன்லைன் மூலம் செலுத்தலாம். ஆகவே இந்த உத்தரவுக்க தடை விதிக்க வேண்டும்” என்று வாதாடினார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஏ.எம்.கான்வில்கா் தலைமையிலான அமா்வு கேரள உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதித்தது. மேலும் இதுதொடர்பாக விளக்கம் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பியது.
கேரள உயர்நீதிமன்றம் போன்று அலகாபாத் உயர் நீதிமன்றமும் உத்தரவு பிறப்பித்திருந்தது நினைவு கூரத்தக்கது.