வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம்
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களான அத்தியாவசிய பொருள்கள் (திருத்த) சட்டம் 2020, உழவர் உற்பத்தி வர்த்தக (ஊக்குவிப்பு மற்றும் வசதி) சட்டம் 2020, விவசாயிகள் (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு அளித்தல்) விலை உத்தரவாதம் மற்றும் பண்ணை சேவைகள் சட்டம் 2020 ஆகிய மூன்றையும் எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடிக்கத் தொடங்கியுள்ளன. பஞ்சாப், ஹரியானா, குஜராத், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர் உள்ளிட்ட 8 மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் இந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து செப்டம்பர் மாதத்திலிருந்து போராட்டங்களை நடத்திவருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, பாரதிய கிசான் யூனியன் உள்ளிட்ட 32 விவசாய அமைப்புகளின் கூட்டமைப்பான கிசான் மஜ்தூர் சங்கர்ஷ் குழு ‘டெல்லி சலோ’ என்ற பெயரில் தலைநகரை முற்றுகையிட்டுப் போராட்டத்தை முன்னெடுத்துவருகிறது. கடந்த நவம்பர் 26ஆம் தேதி தொடங்கிய இந்தப் போராட்டம் 21 நாள்களாகத் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.
போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசுக்கும், விவசாயிகள் தூதுக்குழுவிற்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இருப்பினும், அந்த பேச்சுவார்த்தையில் தீர்வு இன்றுவரை எட்ட முடியவில்லை. விவசாயிகள் போராட்டம் நாளுக்கு நாள் வீரியமடைந்துகொண்டே வருகிறது.
பொதுநல வழக்கு
இந்நிலையில், டெல்லியில் போராடிவரும் விவசாயிகளை உடனடியாக அப்புறப்படுத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அம்மனுவில்,“ புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடிவரும் விவசாயிகள் நெடுஞ்சாலை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டுவருவதால், பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். நாளுக்கு நாள் கோவிட்-19 பாதிப்பாளர் எண்ணிக்கை உயர்ந்துவரும் சூழலில், டெல்லி போராட்டக்களத்தில் கூட்டம் கூடிக்கொண்டே இருப்பதால் தொற்றுநோய் அச்சுறுத்தல் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடிவரும் விவசாயிகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்” என கோரப்பட்டுள்ளது.
இந்த மனுவானது, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தலைமையில் நீதிபதிகள் ஏ.எஸ் போபண்ணா மற்றும் வி.ராமசுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பாக இன்று (டிச.16) காணொளி வழியே விசாரணைக்கு வந்தது.
மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “விவசாயிகளின் நலனுக்கு எதிராக மத்திய அரசு எந்தவொரு திட்டத்தையும் முன்னெடுக்காது. புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு நன்மை மட்டுமே பயக்கும்” என தெரிவித்தார்.
நீதிமன்ற உத்தரவு
அப்போது மனுவை ஆராய்ந்த நீதிமன்றம், “மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் போராடிவரும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அதிருப்தியை மத்திய அரசு போக்க வேண்டும். பிரச்னையை தீர்க்க நாடு முழுவதும் உள்ள விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளைக் கொண்ட ஒரு குழுவை உருவாக்கலாம். இது தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்” என கூறி விசாரணையை நாளைக்கு (டிச.17) ஒத்திவைத்தது.
இதையும் படிங்க : மேற்குவங்கத்திற்கு செல்லும் தேர்தல் ஆணையத்தின் குழு!