கோவிட்-19 நெருக்கடியில் பள்ளி மாணவர்களுக்கு அளிக்கப்படும் இணையவழி கல்வி தொடர்பாக குட் கவர்னன்ஸ் சேம்பர்ஸ் எனும் தன்னார்வ தொண்டு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது.
அம்மனுவில், "கோவிட் -19 அச்சுறுத்தல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், தற்போது 2020-2021ஆம் கல்வியாண்டு வகுப்புகளை இணையவழி (ஆன்லைன்), டிஜிட்டல் வழிகளில் முன்னெடுக்க அனுமதி வழங்கப்பட்டு, அந்த முறையில் பாடங்கள் கற்பித்தலும் நிகழ்ந்து வருகின்றது.
இம்முறையானது, மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வை கற்பிக்கிறது. அவர்களை உளவியலாக சிக்கலுக்குள்ளாக்குகிறது. ஏற்கனெவே, 6 வயது முதல் 14 வயது வரையிலான குழந்தைகளின் தொடக்கக் கல்வி தொடர்பான பிரச்னைகளை இந்த அரசு திறம்பட கையாளவோ அல்லது தீர்க்கவோ இல்லாத நிலையில், இந்த புதிய பிரச்னையும் தற்போது வேறு விதமான எதிர்விளைவுகளை ஏற்படுத்த தொடங்கியுள்ளது.
நாடு முழுவதும் உள்ள சமூகத்தின் பலவீனமான பிரிவைச் சேர்ந்த சிறார்கள், மாணவர்கள் மன உளைச்சலுக்குள்ளாகி தற்கொலைகள் செய்து கொள்வது, மனச்சிதைவு அடைவது என பூதாகரமான பிரச்சைகள் எழத் தொடங்கிவிட்டன. இவற்றை சீர்ப்படுத்த அரசு போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. திடீரென கல்விமுறையை டிஜிட்டல் மயமாக்குவதால் கல்விசார்ந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த தெரியாத மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
ஊரடங்கின் காரணமாக சொந்த ஊர்களுக்கு சென்ற இடம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகள், வேலைவாய்ப்பை இழந்து பெரும் இன்னலுக்குள்ளாகி இருக்கும் பெற்றோர்களின் பிள்ளைகள், இன்ன பிற காரணங்களுக்காக பள்ளியை விட்டு வெளியேறும் விளிம்பில் உள்ள மாணவர்களிடம் அரசின் அக்கறையின்மையையே இந்த கல்வி வழங்கல் காட்டுகிறது. கல்வி ஆர்வலர்களால் நாடு முழுவதும் இது போன்று எழுப்பப்படும் கேள்விகளுக்கு யாரிடமும் இதுவரை சரியான பதில் கிடைக்கவில்லை.
அனைவருக்கும் முறையான கல்வியை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளுடன் ஊனமுற்ற மாணவர்கள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு வசதி செய்வதற்கான வழிமுறைகளை அரசு செயல்படுத்த வேண்டும். அதற்குரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்" என அதில் கோரப்பட்டுள்ளது.
இந்த மனுவை ஆராய்ந்த நீதிமன்றம், இது குறித்து மத்திய அரசு பதிலளிக்க வேண்டுமென உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது.