ஜம்மு காஷ்மீரில் அரசியலமைப்புச் சட்டம் 370 பிரிவு நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, பயங்கரவாதத்தைத் தடுக்கும் நோக்கில், அங்கு இணைய சேவைகள் முற்றிலும் முடக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, இணைய சேவையை மீண்டும் தொடங்க உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், 2ஜி சேவையை மட்டும் தொடங்க உச்ச நீதிமன்றம் ஜனவரி மாதம் அனுமதி வழங்கியது.
இதனிடையே, ஜம்மு காஷ்மீரில் 4ஜி சேவையைத் தொடங்க அரசுக்கு உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இணைய சேவையைத் தொடங்க உத்தரவிட முடியாது. மாநிலத்தில் 4ஜி சேவை தொடங்குவதன் அவசியத்தை குறித்து, அறிக்கைத் தாக்கல் செய்ய மத்திய அரசு சிறப்புக் குழு அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் மே 11ஆம் தேதி உத்தரவிட்டது.
ஆனால், சிறப்புக் குழுவை அமைக்காமல் மத்திய அரசு நீதிமன்றத்தை அவமதித்து விட்டதாகக் கூறி பவுண்டேஷன் ஆஃப் மீடியா பீப்பிள் என்னும் அமைப்பு, உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தது.
என்.வி. ரமணா, ஆர். சுபாஷ் ரெட்டி, பி. ஆர். கவாய் ஆகிய மூன்று நீதிபதிகள் கொண்ட சிறப்பு அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.
பவுண்டேஷன் ஆஃப் மீடியா பீப்பிள் அமைப்பின் சார்பாக, ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹூஃபேசா அகமதி, 'மே 11ஆம் தேதி பிறப்பித்த உத்தரவின்படி, சிறப்புக் குழுவை அமைத்திருக்க வேண்டும். ஆனால், மத்திய அரசு இந்த உத்தரவைப் பின்பற்றவில்லை. இதுகுறித்து எந்த முடிவையும் பொது வெளியில் அரசு வெளியிடவில்லை' என வாதம் முன்வைத்தார். அதேபோல், "மே 16, 26ஆகிய தேதிகளில் பிரதி நிதிகளை அனுப்பினோம். ஆனால், மத்திய அரசு பதிலளிக்கவில்லை" எனவும் வாதம் முன்வைத்தார்.
மத்திய அரசின் சார்பாக ஆஜரான அரசின் துணை தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா, சிறப்புக் குழு அமைக்கப்பட்டு சில முடிவுகளும் எடுக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்தார். முடிவுகள் ஏன் பொதுவெளியில் வெளியிடப்படவில்லை என நீதிபதி ரமணா கேள்வி எழுப்பினார்.
எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சீல் செய்யப்பட்ட கவரில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது, இது நீதிமன்ற அவமதிப்பா என அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் நீதிமன்றத்திடம் தெரிவித்தார். மேலும், வழக்கை இரண்டு மாதத்திற்கு ஒத்திவைக்க அவர் கோரிக்கை விடுத்தார்.
ஒரே வாரத்தில் பிரமாண பத்திரத்தை, அரசு தாக்கல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் கூறி, நோட்டீஸ் அனுப்ப மறுத்துவிட்டது.
இதையும் படிங்க: "திருக்குறள் அற்புத ஊக்குவிப்பு நூலாகும்" - பிரதமர் மோடி புகழாரம்