மொஹரம், இஸ்லாமிய சந்திர நாள்காட்டியின் முதல் மாதம். ஏழாம் நூற்றாண்டில் கர்பலா போரில் ஹஸ்ரத் இமாம் உசேன் என்ற தியாகியின் மரணத்திற்கு துக்கம் அனுசரிக்கும் விதமாக இஸ்லாமியர்களால் இந்த மாதம் மதுவிலக்கு மற்றும் பிரார்த்தனை கடைபிடிக்கப்படுகிறது.
இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் அப்துல்லா என்பவர் இந்த கரோனா காலத்தில் பூரி ஜெகநாதர் கோயில் ரத யாத்திரைக்கு அனுமதியளித்துள்ளதைப் போல நாடு முழுவதும் மொஹரம் பண்டிகையின் போது ஊர்வலம் செல்ல அனுமதி அளிக்கவேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்.
முன்னதாக இந்த வழக்கு தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் ஊர்வலத்திற்கு அனுமதி அளிப்பது தொடர்பாக மாநில அரசுகளின் எண்ணம் குறித்து கேள்வி எழுப்பினர்.
இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பூரி ஜெகநாதர் ஆலயத் தேரோட்டம் ஒரு மாநிலத்தின் குறிப்பிட்ட இடத்தில் மட்டும் நடப்பது. அங்கு கரோனா தொற்றின் பாதிப்பினை கணக்கிடுவது எளிது. ஆனால், மொஹரம் ஊர்வலத்திற்கு மனுதாரர் நாடு முழுவதும் அனுமதி கோரியுள்ளார். இதனால் ஏற்படும் ஆபத்துகளை கணிக்க இயலாது.
மேலும், ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் நாட்டில் கரோனா வைரஸை பரப்புவதாக குற்றம்சாட்டப்படும் நிலை உருவாகும் எனத் தெரிவித்தனர். மனுதாரர் மேலான நடவடிக்கைகளுக்கு அலகாபாத் நீதிமன்றத்தை அணுகுமாறும் கூறினர்.