கடந்த 1984ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவர வழக்கில், காங்கிரஸ் தலைவர் சஜ்ஜன் குமாருக்கு டெல்லி உயர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. இந்நிலையில் சஜ்ஜன் குமாருக்குப் பிணை வழங்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனு இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் சஜ்ஜன் குமாருக்கு ஆதரவாக வழக்குரைஞர் விகாஸ் சிங் வாதாடினார். அதில், '' சஜ்ஜன் குமார் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளாரா என்ற கேள்வி உள்ளது. அவரை எய்ம்ஸ் மருத்துவமனையில் பரிசோதனை செய்த பின், நேரடியாக சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
கரோனா வைரஸ் காரணமாக, இந்த முறையும் அவரை ஆஜர்படுத்த முடியவில்லை. ஒருவேளை நாளை சஜ்ஜன் குமார் உயிரிழந்தால் அவரின் ஆயுள் தண்டனையை, தூக்கு தண்டனையாக கருதலாம்'' என்றார்.
இதையடுத்து நீதிபதி பாப்டே, '' சஜ்ஜன் குமாரைப் பரிசோதனை செய்த மருத்துவமனைகள் அவருக்கு சிகிச்சைகள் தேவையில்லை என்று அறிக்கை கொடுத்துள்ளது. அதனால் அவருக்கு பிணை வழங்க முடியாது. அதேபோல் இது இனப்படுகொலை தொடர்பான வழக்கு என்பதால், அவருக்கு பிணை வழங்க முடியாது'' என்றார். இதனைத்தொடர்ந்து, இந்த விசாரணையை உச்ச நீதிமன்றம் ஜூலை மாதத்திற்கு ஒத்தி வைத்தது.
இதையும் படிங்க: சீக்கியர்களுக்கு எதிரான வன்முறை: நீதிபதி திங்ராவின் அறிக்கை முக்கிய பங்காற்றுமா?