பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். ஆனால் இது தற்கொலை அல்ல; கொலை என்கிற புகார்கள் முன்வைக்கப்படுகின்றன.
இது தொடர்பாக அவரது சொந்த மாநிலமான பிகார் அரசும் விசாரணை நடத்தியது. மேலும், சுஷாந்த் சிங் தற்கொலை செய்துகொண்ட மகாராஷ்டிரா மாநில அரசும் விசாரணைை மேற்கொண்டது.
இதில் இரு மாநில அரசுகளிடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தந்தை கோரிக்கையின்பேரில், அந்த வழக்கை பிகார் அரசு மத்திய புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைத்தது. இதற்கு மகாராஷ்டிரா அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகிறது.
இதனிடையே சுஷாந்த் சிங்கின் காதலி நடிகை ரியா சக்கரவர்த்தி மீது அவரது தந்தை பிகார் காவல் துறையில் புகார் செய்தார். ரியா சக்கரவர்த்தி உள்ளிட்ட ஐந்து பேர் மீது மத்திய புலனாய்வு அமைப்பு வழக்குப்பதிவு செய்துள்ளது. இதில் அமலாக்கப் பிரிவு முன்பும் ரியா விசாரணைக்கு முன்னிலையாகி இருந்தார்.
இந்நிலையில் தன் மீது பிகார் காவல் துறை பதிவுசெய்துள்ள வழக்குகளை மும்பைக்கு மாற்றக்கோரி உச்ச நீதிமன்றத்தில் ரியா மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், சுஷாந்த் சிங் மரண வழக்கை மத்திய புலனாய்வு அமைப்பு விசாரிக்கலாம் என்றும், வழக்கு விவரங்களை மும்பை காவல் துறை, மத்திய புலனாய்வு அமைப்பிடம் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
இதையும் படிங்க...'அரசு வேலைகளில் ம.பி., இளைஞர்களுக்கே முன்னுரிமை' - சிவராஜ் சிங் சவுகான்