நீட் தேர்வு, சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவன உரிமைகளைப் பறிக்கும் வகையில் இருப்பதாக வேலூர் சி.எம்.சி மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு சிறுபான்மையினர் மருத்துவக் கல்வி நிறுவனங்கள் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
அதில், 'இந்தியாவில் உள்ள சிறுபான்மையினரின் முன்னேற்றத்தை உறுதி செய்யவும், கல்வியை அளிக்கவும் சிறுபான்மையினருக்கும் கல்வி நிறுவனங்கள் நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில், எம்.பி.பி.எஸ்., எம்.டி., பி.டி.எஸ்., எம்.டி.எஸ்., உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் இணைய நீட் எனும் தேசியத் தகுதி - நுழைவுத் தேர்வு, அரசால் புதிதாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இது மத, மொழியியல் சிறுபான்மையினரால் நிர்வகிக்கப்படும் நிறுவனங்களின் உரிமைகளில் தலையிடுகிறது. இந்த நீட் தேர்வினால் சிறுபான்மையினரின் உரிமைகள் பாதிக்கப்படும். சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்' எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையில் நீதிபதிகள் வினீத் சரண், எம்.ஆர். ஷா ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன்னால் விசாரணைக்கு வந்தது.
சிறுபான்மையினர் மருத்துவக் கல்வி நிறுவனங்கள் தொடுத்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'நமது கல்வியமைப்பில் உள்ள தீமைகளைக் களையவும், அமைப்பைச் சிதைத்த பல்வேறு முறைகேடுகளை அகற்றவும் நாடே விரும்புகிறது. அதன் பொருட்டு நாட்டின் நலனையும், எதிர்கால தலைமுறையினரின் கல்வித் தகுதியை திறமையை மேம்படுத்தவும் மருத்துவக் கல்வியைச் சீராக்கும் நோக்கிலேயே நீட் தேர்வு நடத்தப்படுகிறது. மாணவர் சேர்க்கை செயல்முறையைச் சீர் செய்ய இது உதவும்.
இந்த ஒழுங்குமுறை நடவடிக்கைகள் எந்த வகையிலும் மத, மொழியியல் சிறுபான்மையினரால் நிர்வகிக்கப்படும் நிறுவனங்களின் உரிமைகளில் தலையிடாது. சிறுபான்மை நிறுவனங்களுக்கு முழுமையான சுயாட்சி இருக்கும்.
அதேவேளையில், அரசிடம் உதவி பெறும், அரசிடம் உதவி பெறாத சிறுபான்மை தனியார் நிறுவனங்களுக்கான ஒழுங்குமுறை ஆட்சியை வடிவமைக்க அரசுக்கு உரிமை உண்டு, இது அரசியலமைப்பின் வழியே வரும் உரிமை என்பதையும் நாம் மறுக்கக் கூடாது. அரசு உதவி பெறாத, அரசு உதவி பெறும் சிறுபான்மையின கல்வி நிறுவனங்களின் உரிமைகளைப் பறிக்கும் வகையிலும் நீட் சட்டம் இல்லை.
நாட்டின் நலனை முன்னிட்டு கொண்டு வரப்படும் தேர்வுக்கு பெரும்பான்மை, சிறுபான்மை என பார்க்க முடியாது. அதுபோலவே சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் தனியாக தேர்வு நடத்தும் பரிந்துரையையும் ஏற்க முடியாது. அதேபோல சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க முடியாது' என தீர்ப்பளித்துள்ளனர்.
இந்த தீர்ப்பையடுத்து நீட் தேர்வுத் தொடர்பான அனைத்து மனுக்களும் முடித்து வைக்கப்பட்டது.
இதையும் படிங்க : 10,12ஆம் வகுப்புகளுக்குத் தேர்வு நடத்த சிபிஎஸ்சி தயார்!