முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான தேக்கடி ஆனவச்சல் பகுதியில் வாகன நிறுத்தம் கட்ட கேரள அரசு திட்டமிட்டது. இதற்காக கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் பெரியாறு புலிகள் சரணாலயத்துக்குட்பட்ட ஏரியில் இருந்து மணல் அள்ளி வாகன நிறுத்தம் அமைக்கும் பணியை தொடங்கியது.
இந்த வழக்கை விசாரித்த பசுமை தீர்ப்பாயம் கேரள அரசு வாகன நிறுத்தம் கட்ட அனுமதி வழங்கியதுடன், தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்தது.
இதனைத் தொடர்ந்து அணை பகுதியில் கட்டடங்கள் கட்ட தடை விதிக்க கோரி தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்துதமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் ராகேஷ் ஆஜராகி, அணை அருகே வாகன நிறுத்தம் அமைத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் எனவும்,வாகன நிறுத்தத்தால் சிறிய விலங்குகள் வாழ முடியாத நிலை ஏற்படும் என்றும் வாதிட்டார்.
இந்நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷண், கே.எம் ஜோசப் அமர்வு முன்புவிசாரணைக்கு வந்தது. ஆனால் தாம் கேரளாவை சேர்ந்தவர் என்பதால்முல்லைப் பெரியாறு வழக்கை விசாரிப்பது சரியாக இருக்காது என கூறி இந்த வழக்கிலிருந்து நீதிபதி கே.எம்.ஜோசப் விலகினார். இதனையடுத்து வழக்கு விசாரணை மார்ச் 26-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.