டெல்லி: கர்நாடக தொழில் மேம்பாட்டு வாரியத்துக்கு சொந்தமான நிலத்தை அப்போதைய முதலமைச்சர் எடியூரப்பா விடுவித்தார். இதில், ஊழல் நடந்திருப்பதாக கூறி லோக் அயுக்தா காவலர்கள் 2015ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் எடியூரப்பா இரண்டாவது குற்றவாளியாக இணைக்கப்பட்டுள்ளார். ஆகவே அவர் பதவி விலக வேண்டும் எனக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், தன் மீதான வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று பிஎஸ் எடியூரப்பா கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மேலும், எடியூரப்பா மீதான விசாரணையும் லோக் அயுக்தா நீதிமன்றத்தில் தொடர்ந்து நடந்துவருகிறது. இந்த நிலையில், கர்நாடக உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் எடியூரப்பா மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது உச்ச நீதிமன்ற நீதிபதி, “நீங்கள் ஒரு முதலமைச்சர், உங்களுக்கு எதிராக யார் உத்தரவு பிறப்பார்? இல்லை கைது வாரண்ட்தான் பிறப்பிக்க முடியுமா? என்று கேள்வியெழுப்பினார். இதையடுத்து, எடியூரப்பா தாக்கல் செய்த மனு தொடர்பாக நோட்டீஸ் அனுப்பினார்.
இந்த வழக்கில் எடியூரப்பாவுக்கு ஆதரவாக ஆஜரான மத்திய வழக்குரைஞர் முகுல் ரோத்கி, “குற்றஞ்சாட்டு எழுந்த போதும், தற்போதும் எடியூரப்பா முதலமைச்சராக இருப்பதை சுட்டிக்காட்டினார். எனினும் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் வழக்கு விசாரணை உத்தரவுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இதையும் படிங்க: கர்நாடகாவில் 7 அமைச்சர்கள் புதிதாக பதவியேற்பு!