ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த தம்பதியினர் பிப்ரவரி 28ஆம் தேதி சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து, பெண் வீட்டார் சார்பில் அத்தம்பதியினருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, ஜோதி நகர் காவல் நிலையத்தில் கொலை மிரட்டல் குறித்து புகார் அளிக்கப்பட்டது.
புகார் குறித்து காவல்துறை தரப்பில் நடவடிக்கை எடுக்காத நிலையில், காதல் திருமணம் செய்து கொண்ட ஜோடிகள் தங்களுக்குப் பாதுகாப்பு வழங்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதில், மார்ச் 2ஆம் தேதி தங்களின் திருமணத்தை அவர்கள் பதிவு செய்ததாகவும், அதன் பிறகு குடும்ப உறுப்பினர்களிடமிருந்து கொலை மிரட்டல் வந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீதிபதிகள் அசோக் பூஷன், சூர்ய காந்த் ஆகியோர் கொண்ட அமர்வு இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்டு அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கி உத்தரவும் பிறப்பித்துள்ளது. அரசியலமைப்பு பிரிவு 19, 21 ஆகியவையின்படி வயது வந்தவர்கள் தங்களின் விருப்பப்படி திருமணம் செய்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கடும் பனியில் சிக்கியவர்களை மீட்ட இந்திய ராணுவம்