மேகாலயா மாநிலத்தின் கிழக்கு சைந்தியாவில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் புகுந்த வெள்ள நீரில் மூழ்கி 15 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இதனால் சட்டவிரோதமாக செயல்படும் நிலக்கரி சுரங்கங்களை தடுக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டது.
இதை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், நிலக்கரிச் சுரங்கங்களை ஆய்வு செய்ய அறிக்கை வெளியிட்டு மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்தது.
அந்தக் குழு தாக்கல் செய்த அறிக்கையில், மேகாலயாவில் செயல்படும் 24 ஆயிரம் சுரங்கங்களில் பெரும்பாலானவை சட்டவிரோதமானது என்று கூறப்பட்டது. விசாரணையின் போது, சட்டவிரோத சுரங்கங்கள் இருப்பதை மாநில அரசும் ஒப்புக் கொண்டது. இதையடுத்து, மேகாலயா அரசுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் 100 கோடி ரூபாய் அபராதம் விதித்தது.
இதனை எதிர்த்து மேகாலயா அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அதை விசாரித்த நீதிபதிகள் அசோக் பூஷண், கே.எம்.ஜோசப், பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை உறுதி செய்து, அபராத தொகையை வழங்க வேண்டும் என மேகாலயா அரசுக்கு உத்தரவிட்டனர்.