கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட அனைத்து மாநில, யூனியன் பிரதேச மக்களுக்கும் மத்திய அரசு இலவசமாக சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும், அவர்களுக்குத் தேவையான நிவாரணப் பொருள்களுக்கு ஜி.எஸ்.டி விலக்கு அளிக்கவேண்டும் எனவும், இந்தியாவில் போதுமான சுகாதாரக் கட்டமைப்பு இல்லை எனவும், தனியார் மருத்துவமனைகளுடன் இணைந்து மத்திய அரசு செயல்படவேண்டும் எனவும் டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் அமித் திவேதி பொதுநல வழக்கினை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இந்த மனுவினை விசாரித்த நீதிபதி என்.வி.ரமணா, இலவசமாக யாருக்கு சிகிச்சை அளிக்கவேண்டும் என்பதை அரசு முடிவு செய்யும். தற்போது நாட்டில் பெருந்தொற்றை சமாளிக்கும் அளவிற்குப் போதிய நிதி இல்லை என தெரிவித்தார்.
முன்னதாக, நீதிபதிகள் எஸ்.கே. கவுல், பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, விளம்பர ஆதாயத்திற்காக எவ்வித வழக்குகளையும் தொடரவேண்டாம் எனவும் மத்திய, மாநில அரசுகள் கரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவசமாக சிகிச்சை அளித்து வருவதையும் சுட்டிக்காட்டி மனுவைத் தள்ளுபடி செய்தனர்.
மேலும், நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் போதுமான சுகாதார வசதிகளை ஏற்படுத்தித் தர மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் உச்ச நீதிமன்றத்தில் கூறியுள்ளதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:அனைத்து செய்தியாளர்களுக்கும் கரோனா சோதனை - டெல்லி முதலமைச்சர்