நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிக அளவில் உள்ளது. இச்சூழலில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் ஆம்புலன்ஸ் சேவையை நாடும்போது, அவர்களிடம் அதிகப்படியான பணம் வசூலிக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது. இது குறித்து பொதுநல வழக்கு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று (செப்.11) , இவ்வழக்கு நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அதில், ”தொற்றுநோய் காலக்கட்டத்தில் எப்படி செயல்பட வேண்டும் என்பதைத் தெரிவிக்கும் வழிகாட்டுதல்களை அனைத்து மாநிலங்களும் நிச்சயம் பின்பற்ற வேண்டும்.
மாநிலங்களில் ஆம்புலன்ஸ் சேவை போதுமான அளவில் இருக்க வேண்டும். கரோனா நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்து வரும் வகையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு ஆம்புலன்ஸ் தயார் நிலையில் இருக்க வேண்டும். அதுமட்டுமின்றி ஆம்புலன்ஸ் சேவைகளுக்கு நியாயமான விலையை நிர்ணயிக்க வேண்டும்” என அனைத்து மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கு விசாரணை முடித்துவைத்தது.