தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், உச்ச நீதிமன்றத்தின் அலுவலகத்தை கொண்டுவரலாம் என்று டெல்லி உயர் நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்திருந்தது. 2010ஆம் ஆண்டு வெளியான இந்தத் தீர்ப்பு அரசியல் வட்டாரம் மட்டுமின்றி சட்ட வல்லுனர்கள் இடையேயும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்தத் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில், நீதிபதிகள் என்.வி. ரமணா, டி.ஒய். சந்திரசூட், தீபக் குப்தா, சஞ்சீவ் கன்னா ஆகியோர் கொண்ட அரசியலமைப்பு அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
முன்னதாக நீதிபதிகள் இன்று மதியம் 2 மணிக்கு தீர்ப்பளிக்கப்படும் என்று கூறியிருந்தனர். அதனால் உச்ச நீதிமன்ற வளாகத்தில் ஒருவித பரபரப்பு நிலவியது. இந்த நிலையில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை நீதிபதிகள் வழங்கினார். நீதிபதிகள் வழங்கிய இந்தத் தீர்ப்பு, இந்திய அரசியலமைப்பில் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றால் அது மிகையல்ல. நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில், 2010ஆம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தனர்.
அதாவது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அலுவலகமும் வரும். இனி உச்ச நீதிமன்ற அலுவலகம் தொடர்பான விவரங்களையும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்றுக் கொள்ளலாம்.
இந்த வழக்கு வாதத்தின்போது, நீதிபதிகளின் நற்பெயரை கெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சிலர் இவ்வாறு நடந்துகொள்கின்றனர் என்றும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. ஒருமுறை இது தொடர்பாக வழக்கு விவாதத்தின்போது நீதிபதிகள் என்ன வேற்று உலகிலா வசிக்கிறார்கள்?
வெளிப்படைத்தன்மைக்கு உச்ச நீதிமன்றம் எப்போதும் துணைநிற்கும் என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்திருந்தனர் என்பது நினைவுகூரத்தக்கது.
இதையும் படிங்க: ரபேல் வழக்கு மறுசீராய்வு மனுக்கள் மீது நாளை தீர்ப்பு